மட்டக்களப்பு கடலில் பெருந்தொகையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பில் இன்றைய தினம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
இது உண்மையில் பாம்பா? அல்லது மீன் இனமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், இதன் வருகையை ஆபத்தின் அறிகுறியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அது மட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி பாம்பு இனம் என்றும் சிலர் ஆரல் மீன் எனவும் அழைப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால்தான் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளது.
உண்மையில் இந்த வகை பாம்பினமானது சுனாமி வரும் முன்பும், மழை அதிகரிப்பதனாலும் ஆற்றில் இருந்து ஆற்று வாய் ஊடக கடலில் செல்வதாக கூறப்படுகின்றது.
கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் சுனாமி வந்ததாக மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள், கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டாலும், உண்மை காரணம் அது அல்ல என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கிழக்கு மாகணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருந்ததனால் இந்த பாம்பினை மக்கள் கண்களால் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததும் காவல் அரண்கள் அகற்ற பட்ட போது , பாலத்தின் ஊடக மக்கள் பயமின்றி எந்த நேரமும் பிரயாணம் செய்யும் போது பாம்புகள் செல்வதை மக்கள் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த பாம்பு இனமானது பல ஆண்டுகளுக்கு முன் ஆற்று வாயில் வலை வீசிய மீனவர்களின் வலைகளை கூட இழுத்து சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பாம்பினமானது கடலில் அதிக காலம் வழாது. உப்பு தன்மை அதிகரிக்கும் போது இவைகள் இறந்து கரையொதுங்குகின்றது.
இருந்தாலும் இது போன்ற அதிகளவிலான பாம்பினகள் கடலில் குறிப்பாக கரை வலையில் பிடிபட்ட சம்பவம் இதுவே முதல் தடவை என்றும் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவு படுத்த வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது.
கோரத் தாண்டவம் ஆடிய சுனாமியின் வடுக்களை சுமந்து இன்றும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் சாதாரண வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயப்படுவது யதார்த்தமான உண்மை.
எது எவ்வாறாக இருந்தாலும் சுனாமியின் பின் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளது.
இது குறித்து மக்கள் அச்சம் அடைவதா? அல்லது வழமை போல இது இடம்பெறுகின்றதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கை சீற்றம் என்பது திடீர் என வருபவை எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சால சிறந்தது.